📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
முகப்பு · சா/த · தமிழ் · பழைய வினாத்தாள்கள் · 2015

📄 சா/த தமிழ் — 2015 (டிசம்பர்)

விடைகள் பற்றி இவை உண்மையான வினாத்தாள் வினாக்கள். விடைகள் NIE பாடநூலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை — உத்தியோகபூர்வ விடைத்திட்டத்துடன் சரிபார்க்கவும்.

பகுதி II — கட்டமைப்பு வினாக்கள்

வினா 1 (கட்டாயம்). Paper II · இலக்கண வினாக்கள் — 10 உப வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
சுருக்கமான விடை எழுதுக:

(i) பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக: 'வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு'

(ii) "காவலரைத் தன்சேடி காட்டக்கண்டீரிருவர் தேவர் நளனுருவாச் சென்றிருந்தார்."
(அ) 'சேடி' என்பதன் பொருள் யாது?
(ஆ) இங்கு ஆறாம் வேற்றுமை ஏற்ற நிலையில் உள்ள படர்க்கைப் பெயர் யாது?

(iii) "குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்." — இதில் இடம்பெற்றுள்ள அணியை விளக்குக.

(iv) பின்வரும் பேச்சுவழக்குத் தொடரை எழுத்துவழக்குத் தொடராக மாற்றுக: "நீங்க அப்பிடித்தான் சொல்லுவியள்."

(v) பின்வரும் கவிதைப் பகுதியின் எழுவாய், பயனிலைகளைக் குறிப்பிடுக:
"துள்ளிப்படர்ந்து தொடருகிற காலமும் சற்று நின்று பின்னோக்கித் தாமதிக்கமாட்டாது."

(vi) 'ஆள்' என்பது பெயராகவும் வினையாகவும் வரத்தக்க வகையில் ஒவ்வோர் வாக்கியம் எழுதுக.

(vii) "ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்து விட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ?" — 'அத்திம்பேர்' என்பதற்கு ஈடாக இலங்கைத் தமிழில் வழங்கும் உறவுப்பெயர்கள் இரண்டு தருக.

(viii) "அத்தடாகத்தினுள்ளே 'பொன்னின்மடப்பாவை போய்ப்புக்காள்' உருவகத்தால் விழித்தாமரை பூத்த மண்டபம் ஒரு தடாகமாகவே, புகுந்த மடப்பாவை, நீரில் நீந்தும் — ஒயிலாக அசைந்து திரியும் — பட்சியாக எமது கருத்தில் பெற்று விடுகிறாள்."
— இவ்வுரைப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறுத்தக்குறிகள் யாவை?

(ix) நாடக அளிக்கையைப் பொறுத்தவரையில், பின்வருவோருள் அத்தியாவசியம் இல்லாதவர் யார்?
நடிகர், நாடகாசிரியர், நெறியாளர், ஒளிப்பதிவாளர், ஒளியமைப்பாளர்

(x) 'சரணாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மக்களைத் தாக்கிய காட்டுயானை' — மேலே காண்பது பத்திரிகைச் செய்தி ஒன்றின் தலைப்பு. அத்தலைப்பில் உள்ள மயக்கத்தைத் தவிர்த்துத் தெளிவான முறையில் திருத்தி எழுதுக. (20 புள்ளிகள்)
வினா 2. Paper II · கட்டுரை / பேட்டி / மேடைப்பேச்சு / சிறுகதை (25 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து ஏறத்தாழ 250 சொற்களில் தலையங்கமிட்டு எழுதுக:

(i) வெகுஜன தொடர்பு சாதனங்கள் சமூகத்துக்கு வேண்டிய தகவல்களைப் பரவச் செய்யவும், சமூக அபிப்பிராயம் ஒன்றை உருவாக்கவும் வல்லவை. ஆனால், பெரும்பாலான ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்குச் சாதனங்களாகவே இயங்குகின்றன. இலாபம் தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டு பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்கின்றன. இவ்வாறான சூழலில் ஊடகங்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் ஒரு கட்டுரை.

(ii) ஆற்றலும் பிரபலமும் வாய்ந்த ஓர் இலக்கிய கர்த்தாவைச் சந்தித்து, இலக்கியம் பற்றிய அவரது கோட்பாடு, இலக்கிய உலகின் இன்றைய போக்கு, இலக்கியத்துறையில் அவர் சாதித்தவை என்பவை குறித்து அவரிடம் நீர் கண்ட ஒரு பேட்டி.

(iii) நீர், உலகின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று; உயிர்களின் வாழ்வாதாரமானது; அது இயற்கையின் கொடை; எனினும் வரையறைப்பட்ட அளவிலேயே கிடைப்பது; ஆனால் மனிதன் நீரை மாசுபடுத்துவதோடு வீண் விரயமும் செய்கிறான். அதைத் தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு மேடைப் பேச்சு.

(iv) வறிய குடும்பத்தில் பிறந்த சீலன் நல்லொழுக்கமும் இரக்க சுபாவமும் வலிய முயற்சியும் உடையவனாக இருந்தபோதிலும் படிப்பில் கெட்டிக்காரனாகக் காணப்படவில்லை. அவனது ஆசிரியர்களும் சகமாணவர்களும் சீலனை ஏளனம் செய்வார்கள்; காலம் கடந்தது; சீலனோடு கற்ற மாணவர்கள் பலர் வாழ்க்கையில் அதிகம் வெற்றி பெறவில்லை; சீலன் சுயமுயற்சியால் பிரபலமானவனாகவும் பணக்காரனாகவும் ஆனான். சிறுவயதில் சீலனை ஏளனம் செய்து மனதைப் புண்படுத்திய ஒருவன் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் சீலனின் உதவியால் காப்பாற்றப்படுகிறான். அந்நிலையில் சீலனோடு தொடர்புபட்ட கடந்த காலத்தை அவன் நினைவில் மீட்கும் பாங்கிலான ஒரு சிறுகதை.
வினா 3 (கட்டாயம்). Paper II · பண்பாடு உரைப்பகுதி சுருக்கம் 40-45 சொற்கள் (10 புள்ளிகள்) த10·அ2
3. கீழே தரப்பட்டுள்ள உரைப்பகுதியின் சுருக்கத்தை 40-45 சொற்களில் எழுதுக (சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக).

"சீலம், திருந்திய உணர்ச்சி, ஆசாரம், கல்வி, கலை இவையெல்லாம் கூடி, பண்பாடு என்பது உண்டாகும். பண்பட்ட மனிதனுக்கும் பண்படாத பிராகிருத மனிதனுக்குமுள்ள வித்தியாசம் பண்பட்ட வயலுக்கும் பண்படாத காட்டு நிலத்திற்குமுள்ள பேதத்தைப்போல. பண்பாட்டை இரு வழியில் அடைகிறோம். தனி மனிதனாகத் திருத்தப்பட்டு அடைவது ஒரு வழி. மற்றொன்று, சமூகத்தில் பரம்பரையாகப் பரவி நிற்கும் பண்பாட்டின் பயனாகத் தனிப் பிரயத்தனமின்றி அனைவரும் அடையும் பண்பாடு. கொஞ்சக் காலமாகத்தான் நாம் நம்முடைய சமூகப் பண்பாட்டைப்பற்றிச் சிந்தித்தும் பேசியும் வருகிறோம். ஒருவனிடத்திலே ஏதாவது ஒரு பொருள் ஏராளமாயிருக்குமானால், அதைப்பற்றி அவனுக்கு நினைவே இராது. நம்மிடம் இல்லாத பொருளைப் பற்றித்தான் நாம் அதிகமாகப் பேசுவோம். நமக்கு ஏதேனும் நோய் வந்தால்தான், நம் உடலில் ஓடும் இரத்தத்தைப்பற்றி எண்ணுகிறோம். பண்பாட்டின் விஷயமும் இப்படித்தான். பண்பாடென்பது இந்திய மக்களிடையே தொன்றுதொட்டு வந்த ஒரு செல்வம். இப்படி ஒரு செல்வம் நமக்கிருப்பதையே நாம் உணரவில்லை. அயலார் வந்து சொன்ன பிறகுதான் இதை நாம் அறிந்தோம்."
வினா 4 (கட்டாயம்). Paper II · "செக்கச்சிவந்த" பாரதியார் கவிதை வினாக்கள் (10 புள்ளிகள்) த10·அ2
4. பின்வரும் பாடலை வாசித்து அதன் கீழ் தரப்பட்டுள்ள வினாக்களுக்குப் பூரண வாக்கியங்களில் விடை எழுதுக:

செக்கச்சிவந்த செங்கதிரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் — புவி
மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
வானில் உதித்து விட்டான்!

கொக்கரக்கோவெனக் கோழியும் கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற இருள் சொல்லாமல் ஓடுது:
பத்துத் திசையிலும் — ஜன சக்தி முழங்கிடுதே!

கத்தும் பறவை கனிமரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே — தலைப்
பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி
பேதம் வளர்த்திடுதே!

ரத்த வியர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே — ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே — மக்கள் வெற்றி நெருங்கிடுதே!

(i) இப்பாடல் வலியுறுத்தும் பிரதான விடயம் யாது?
(ii) இப்பாடலில் 'கண்' என்று உருவகிக்கப்படுவது எது?
(iii) இதில் இடம்பெற்றுள்ள உவமையை இனங்கண்டு விளக்குக.
(iv) இதில் இடம்பெற்றுள்ள ஒலிக்குறிப்புச் சொல் யாது?
(v) "கத்தும் பறவை கனிமரத்தில் வந்து ஒற்றுமை காட்டிடுதே — தலைப் பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி பேதம் வளர்த்திடுதே!" — இவ்வடிகளின் மூலம் நீர் விளங்கிக்கொள்வது யாது?
வினா 5. Paper II · துண்டுப்பிரசுரம் அல்லது கடிதம் (15 புள்ளிகள்) த10·அ3
5. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்க:

(i) உமது கிராமத்தின் சனசமூக நிலையம் ஒன்றில் வாசிப்பு மாதத்தை பயன்பாடு மிக்கவகையில் நடைமுறைப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் செயலாளர் என்ற வகையில், வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் வாசிப்புப் பழக்கத்தின் வீழ்ச்சி, அதற்கான காரணங்கள், வாசிப்பை ஊக்குவிப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்பவற்றை விவரித்தும் 100 சொற்களில் ஒரு துண்டுப்பிரசுரம் எழுதுக.

(ii) குடியிருப்புக்கள் நெருக்கமான நகரங்களிலும் கிராமங்களிலும் கழிவகற்றல் என்பது மிக முக்கியமான பிரச்சினையாக சூழலை மாசுபடுத்துவதாக உள்ளது. கழிவகற்றல் நடவடிக்கையில் பொதுமக்களும் உரிய அதிகாரிகளும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிரச்சினையைத் தவிர்ப்பதோடு கழிவுகளைப் பயனுடையனவாக்கவும் முடியும். இவற்றை வலியுறுத்தி, உமது பிரதேசத்தில் கழிவகற்றும் நடவடிக்கைக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிக்கு 100 சொற்களில் ஒரு கடிதம் எழுதுக.
வினா 6 (கட்டாயம்). Paper III · சுருக்கமான இலக்கிய வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
1. சுருக்கமான விடை தருக:

(i) "சொல்லவல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது."
(அ) 'இகல்' என்பதன் பொருள் யாது?
(ஆ) மேற்படி குறட்பாவின் பொருளைத் தெளிவுறுத்துக.

(ii) 'கலம்பகம்' என்ற இலக்கிய வடிவத்துக்கு அப்பெயர் அமையப்பெற்றதன் காரணத்தை விளக்குக.

(iii) "என்ன? குண்டல வர்ணனை இரண்டாயிரம் பாட்டா? ஒரு குண்டலத்துக்கு இரண்டாயிரம் பாட்டா? இல்லே இரண்டுக்கும் சேர்த்தா?"
(அ) இக்கூற்று யாரால் யாருக்குக் கூறப்பட்டது?
(ஆ) இக்கூற்றில் தொனிப்பது ஐயமா? அங்கதமா? ஆச்சரியமா?

(iv) "நந்திச்சீராமனுடை நல்நகரில் நல்நுதலைச் சந்திச்சீர ஆமாகில் தான்."
(அ) இதில் இடம்பெற்றுள்ள உருவகம் யாது?
(ஆ) இதில் இடம்பெற்றுள்ள பேச்சுவழக்குச் சொல்லை இனங்கண்டு அதனை எழுத்துவழக்குக்கு மாற்றி எழுதுக.

(v) "அருந்தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மைபோல் அடுக்கடுக்காக அலைகள் கரையருகே வந்து சேர்ந்தன." — இதில் பயின்றுள்ள அணியை இனங்கண்டு விளக்குக.

(vi) "செம்பொன் துளிர் முதிரப் பசுமை கனக்கும் இளவேனிற் கிளைகள்" — என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

(vii) '[பரந்த திறலாரை...' எனத் தொடங்கும் பழமொழி நானூற்றுப் பாடலில் பயின்றுள்ள பழமொழி யாது? அதனால் உணர்த்தப்படும் உண்மை யாது?

(viii) "அவளுடைய நிறம் ஸப்த வர்ணங்களிலே ஒன்றல்ல; அவற்றுக்குப் புறம்பானது."
(அ) இங்கு 'அவள்' என்று சுட்டப்படுவது எது?
(ஆ) 'ஸப்த' என்பதன் பொருள் யாது?

(ix) "இஞ்சேருங்கோ, உங்களிடம் போஸ்ற் மாஸ்நர் வந்திருக்கிறார்." "அப்பா லோண்டரியில் இருந்துவந்த வெள்ளை வேட்டி கட்டி நீலக்கோடுகள் உள்ள நீளக்கைச் சேட்டைப் போட்டார்."
(அ) 'போஸ்ற் மாஸ்நர்' என்பதற்கு நடைமுறையில் உள்ள தமிழ்ச் சொல் தருக.
(ஆ) 'லோண்டரி' என்பதற்கு நடைமுறையில் உள்ள தமிழ்ச் சொல் தருக.

(x) "மழை பாடுகின்றது. அது பலகோடி தந்திகளுடைய ஓர் இசைக்கருவி."
(அ) இங்கு இசைக்கருவியாக உருவகிக்கப்படுவது யாது?
(ஆ) அதன் தந்திகள் யாவை?
வினா 7 (கட்டாயம்). Paper III · கவிதை/உரைநடை பகுதிகள் — கருத்தும் சிறப்பும் (20 புள்ளிகள்) த11·அ9
2. பின்வரும் செய்யுட் பகுதிகள், உரைநடைப் பகுதிகள் ஒவ்வொன்றினதும் கருத்தை உமது மொழிநடையில் எழுதுக. அவை ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்துகளிலுள்ள தொடர்களின் சிறப்புகளை விளக்கி எழுதுக.

(அ) ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் — நாணிப்
**பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல**
**வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு.**

(ஆ) **பாலோடளாயநீர பாலாகுமல்லது**
**நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்** — தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், **நல்ல**
**பெரியார் பெருமையைச் சார்ந்து.**

(இ) "அவிநவ அகத்திய, தண்டமிழ்ச் சாகர, தான்தோன்றிக் குமாரப்புலவர் என்பவர் நாமே. நமது பெருமை மலைமேலிட்ட தீபம். **ஈயாத லோபிகள் எல்லாம் பூண்டற்றுப் போகும்படி வசை பாடுவோம்.** தமிழுக்குத் தீங்கு புரிவோர்கள் **இலவம் பஞ்சாகப் பறக்க அறம் பாடுவோம்.** 'இம்' என்றால் எழுநூறும் 'அம்' என்றால் ஆயிரமுமாகக் கவிமாரி பொழிவோம்."

(ஈ) "ரெயில் வண்டி வெறிபிடித்தது போல தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் **கன வேகமாகப் போய்க்கொண்டிருந்தது போல் இருந்தது.** துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம் போலத் தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்துசென்றது. **சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப்போலப் பின் தங்கிவிடாதா?** நிம்மதி, நிச்சயம் கூடவராது! சென்னையில் காலைதான்! **காலையைப் போல அங்கே எங்களை வந்தடையாதா?**"
வினா 8 (கட்டாயம்). Paper III · "பார்வைகள்" அல்லது "நட்சத்திரக் குழந்தைகள்" சிறுகதை (15 புள்ளிகள்) த11·அ9
3. 'பார்வைகள்' சிறுகதையில், லிங்கம் என்ற பாத்திரம்
(அ) குடும்பத்தலைவன்
(ஆ) சமூக உறுப்பினன்
(இ) அலுவலக ஊழியன்
என்னும் மூன்று நிலைகளிலும் ஆளுமையோடு தொழிற்படுமாற்றை விவரிக்குக.

அல்லது

'நட்சத்திரக் குழந்தைகள்' என்னும் சிறுகதையில்
(அ) குழந்தையின் வெகுளித்தனம்
(ஆ) பெற்றோரின் இயல்பு
(இ) மாற்றமுறும் வானத்தின் தோற்றம்
என்பன கலாபூர்வமாகச் சித்திரிக்கப்படுமாற்றினை விளக்குக.
வினா 9 (கட்டாயம்). Paper III · "கவிச்சக்கரவர்த்தி" நாடகம் அல்லது "மங்கையர்க்கரசியின் காதல்" (15 புள்ளிகள்) த11·அ9
4. 'கவிச்சக்கரவர்த்தி' நாடகத்தில்:
(அ) கம்பர்
(ஆ) ஒட்டக்கூத்தர்
(இ) குமாரப்புலவர்
ஆகிய பாத்திரங்கள் அவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் புலப்படும் வகையில் படைக்கப்பட்டிருக்குமாற்றினைத் தெளிவுறுத்துக.

அல்லது

'மங்கையர்க்கரசியின் காதல்' கதையில் மங்கையர்க்கரசியின்
(அ) காதல்
(ஆ) யோகம்
(இ) சோகம்
என்பன புலப்படுமாற்றினை விளக்குக.
வினா 10. Paper III · "நிழலின் நினைவு" — வேப்பமரம் + நம்பிக்கை (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
5. 'நிழலின் நினைவு' என்ற கவிதையில்
(அ) வேப்பமரமும் அதனோடு தொடர்புபட்ட விலங்குகளின் நடத்தைகளும்
(ஆ) வேப்பமரத்தின் வீழ்ச்சியும் வருங்காலம் பற்றிய நம்பிக்கையும்
கவிஞரால் அழகுறச் சித்திரிக்கப்படுமாற்றை விளக்குக.
வினா 11. Paper III · "புறப்படுவோமே மச்சான்" + "கடற்புறம்" (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
6. (அ) 'புறப்படுவோமே மச்சான்...' என்ற நாட்டார் பாடலில் மீனவர்களது உற்சாகம், அவர்களது தொழில் பற்றிய பெருமிதம் என்பன புலப்படுமாற்றையும்
(ஆ) 'கடற்புறம்' என்ற கவிதையில் மீனவர் சமூகத்தின் அவல வாழ்வு சித்திரிக்கப்படுமாற்றையும் விளக்குக.
வினா 12. Paper III · "பாரதியார் கவிநயம்" — இயற்கை + குழந்தை உவகை (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
7. 'பாரதியார் கவிநயம்' என்னும் கட்டுரையில்
(அ) இயற்கையழகு
(ஆ) குழந்தைகளால் பெற்றோர் அடையும் உவகை
ஆகியவற்றை எடுத்துரைக்கும் ஆற்றல் பாரதியாரிடம் காணப்படுகின்றது என்பதைக் கட்டுரையாசிரியர் நிறுவுமாற்றைத் தெளிவுறுத்துக.

பகுதி I — புறவய வினாக்கள் (MCQ)

MCQ விடைகள் புறவய விடைகள் உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் சரிபார்க்கவும். ✓ குறி திட்டமிட்ட விடையை மட்டும் குறிக்கிறது.
  1. "மருள் தீர்ந்த மாசறு காட்சியவர்" — இங்கு காட்சி என்பதன் பொருள்
    1. பார்வை
    2. நோக்கம்
    3. அறிவு
    4. தெளிவு
  2. "அளகக் காட்டை மிதிக்கும் கயற்கண்ணி" — அளகம் என்பது
    1. வடிவு
    2. கூந்தல்
    3. பெருமை
    4. அழகு
  3. "ஆழிவாய்ச் சத்த மடங்காதோ" — இங்கு ஆழி என்பது
    1. சங்கு
    2. சிங்கம்
    3. சக்கரம்
    4. கடல்
  4. "நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும்" — நல்கூர்ந்தார் என்பதன் ஒத்த கருத்துள்ள சொல்
    1. வறியவர்
    2. செல்வர்
    3. இளையவர்
    4. முதியவர்
  5. "வாலைப் பருவ வாழை இலைகள்" — வாலை என்பதன் எதிர்க்கருத்து
    1. முதிர்ந்த
    2. வாலுள்ள
    3. காய்ந்த
    4. இளைய
  6. ஆண் மாடு : எருது; ஆண் மான் : ______
    1. குருளை
    2. ஏறு
    3. கலை
    4. பிணை
  7. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறுவர் பாதுகாப்பு நிதியம், சர்வோதயம் முதலானவற்றைக் குறிப்பதற்கு நடைமுறையில் பயன்படும் பொதுச்சொல்
    1. அரச நிறுவனங்கள்
    2. அரச சார்பற்ற நிறுவனங்கள்
    3. திணைக்களங்கள்
    4. சர்வதேச சபைகள்
  8. பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றுக்கு வாசகர்கள் என்பதுபோல் தொலைக்காட்சி, வானொலி, சினிமா என்பவற்றுக்கு______
    1. நேயர்கள்
    2. ரசிகர்கள்
    3. பார்வையாளர்கள்
    4. சபையோர்

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  9. பிரபந்தம் என்ற சொல்லுக்கு நிகராகத் தமிழில் வழங்கும் சொல்
    1. காவியம்
    2. பெருங்காப்பியம்
    3. சிற்றிலக்கியம்
    4. பேரிலக்கியம்
  10. "வெகுஜனங்களின் ஊடகமாக மொழி வளர்ந்துள்ளது" — வெகுஜனங்கள் என்பதன் பொருள்
    1. நிறைந்த மக்கள்
    2. மேன்மக்கள்
    3. ஒருபகுதி மக்கள்
    4. பொதுமக்கள்
  11. "கல்யாணி ராகத்தின் அவரோகணம் போல அவளுடைய சௌந்தர்யம் தணிந்தது" — அவரோகணம் என்ற சொல்லின் பொருள்
    1. ஏற்றம்
    2. ஆரோகணம்
    3. இறக்கம்
    4. சமநிலை
  12. "அன்னியோன்னியத் தொடர்பில் வீழ்ச்சி ஏற்பட்டதை லிங்கம் அனுபவித்தான்" — அன்னியோன்னியம் என்ற சொல் உணர்த்துவது
    1. அன்னியத்தன்மை
    2. நெருக்கம்
    3. மூரண்பாடு
    4. இடையீடு
  13. "அந்த வேகத்தைக் குழந்தையின் சிறிய மனம் தொடர்ந்து செல்வது சாத்தியமில்லை" — சாத்தியமில்லை என்ற தொடரின் பொருளைத் தரும் சொல்
    1. இயலும்
    2. பொருத்தம்
    3. பிரயத்தனம்
    4. அசாத்தியம்
  14. "ரெயில் வண்டி வெறிபிடித்தாற்போல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது" — தலைதெறிக்க என்ற அடைமொழியால் உணர்த்தப்படுவது
    1. பெரும் அச்சம்
    2. ஒழுங்கின்மை
    3. கடும் வேகம்
    4. பெரும் ஆபத்து
  15. "மதுரையிலே ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது என்பது கர்ணபரம்பரைச் செய்தி" — கர்ணபரம்பரைச் செய்தி என்றால்
    1. மறுதலிக்க முடியாத செய்தி
    2. நிறுவப்பட்ட உண்மை வரலாறு
    3. நிறுவப்படாத ஆனால் வழிவழியாக நம்பப்படும் செய்தி
    4. கர்ணனுடைய பரம்பரையால் முன்வைக்கப்பட்ட செய்தி
  16. மேல்வருவனவற்றுள் பொருளால் வேறுபட்டு நிற்கும் சொல்
    1. செவ்வி
    2. வியாசம்
    3. பேட்டி
    4. நேர்முகம்
  17. "இளந்தளிர்கள் சடசடவென ஒடிந்துகொண்டிருந்தன" — சடசட என்பது
    1. மரபுத்தொடர்
    2. உவமைத்தொடர்
    3. இரட்டைக்கிளவி
    4. இணைமொழி
  18. உலகமயமாதல் என்பதற்கு நிகராகத் தமிழில் வழங்கும் மற்றுமொரு கலைச்சொல்
    1. காலனித்துவம்
    2. சமஸ்கிருதமயமாதல்
    3. பூகோளமயமாதல்
    4. ஐக்கிய நாடுகள் சபை உறுப்புரிமை
  19. "உழைத்துப் பொருள் தேடாது செலவு செய்தால் எந்தப் பெருஞ் செல்வமும் ஜீரணித்துப் போகும்" என்ற கருத்தைத் தரும் பழமொழி
    1. எறும்பூரக் கற்குழியும்
    2. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்
    3. குந்தித் தின்றால் குன்றும் மாளும்
    4. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
  20. பலரும் அறியத்தக்க வகையிலும் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கத்தக்க வகையிலும் கல்லிலோ உலோகத் தகடுகளிலோ அவை போன்ற பிறவற்றிலோ எழுதி வைக்கப்படும் தகவலைக் குறிக்கும் மிகப் பொருத்தமான சொல்
    1. கல்வெட்டு
    2. சிலாசாசனம்
    3. சாசனம்
    4. தாமிரசாசனம்

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  21. "கிட்டத்தட்ட" என்பதற்கு இணையான பிறிதொரு இணைமொழி
    1. ஏறக்குறைய
    2. ஈடும் எடுப்பும்
    3. சுமார்
    4. அண்ணளவாக
  22. மேல்வருவனவற்றுள் பெயரடியாகப் பிறந்த ஆக்கப்பெயர்
    1. அறிவு
    2. கல்வி
    3. கேள்வி
    4. புலமை
  23. வகர உடம்படுமெய் தோன்றிப் புணர்ந்த சொல்
    1. தாழ்வு
    2. வறுவல்
    3. சமத்துவம்
    4. நழுவல்
  24. வினைச்சொல்லில் அமைந்துள்ள குற்றெழுத்து ஒன்று நெடிலாவதன் மூலம் உண்டான ஆக்கப்பெயர்
    1. சீற்றம்
    2. வீச்சு
    3. கேடி
    4. பேசு
  25. "போ" என்பது முதல்வினையாக அமைந்த வாக்கியம்
    1. மழைவரப் போகிறது
    2. வண்டி புறப்படப்போகிறது
    3. போக்குவரத்திலே காலம் செலவாகிறது
    4. வரப்போக அதிக செலவாகிறது
  26. மொழி முதலில் அகர உயிர் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
    1. அன்னம்
    2. அறிஞன்
    3. அற்பம்
    4. அரை

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  27. பின்வருவனவற்றுள் உயர்திணைப் பெயர்கள் யாவை? (அ-அமைச்சரவை ஆ-அவைத்தலைவர் இ-காதல் ஈ-காதலி உ-கட்டாக்காலி)
    1. அ, ஆ, ஈ
    2. ஆ, ஈ, உ
    3. ஆ, ஈ
    4. ஈ, உ
  28. பன்மை உருபு பெற்று அமையத்தக்க சொல்
    1. அன்பு
    2. தண்ணீர்
    3. [OCR garbled]
    4. இந்தியா

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  29. "நாங்கள் மட்டும்தான் ஆயுதம் வைத்திருக்கலாம்" — இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள தொகை
    1. வினைத்தொகை
    2. வேற்றுமைத்தொகை
    3. பண்புத்தொகை
    4. உம்மைத்தொகை
  30. நூறு ஆண்டுகளைக் குறிப்பது
    1. தசாப்தம்
    2. சதாப்தம்
    3. சகாப்தம்
    4. சஷ்டியப்தம்
  31. "நமது சமுதாயத்தில் அறிவியலும் தொழிநுட்பமும் ஆங்காங்கு ஒளிபரப்பும் மின்விளக்குகள் போல் இருக்கின்றன... அவை... எங்கும் ஒளிவீசும் முழு நிலவு போன்று இல்லை." — ஆசிரியர் வலியுறுத்த விரும்புவது
    1. நமது சமுதாயத்தில் அறிவியலும் தொழிநுட்பமும் ஒளிவீசவில்லை
    2. நமது சமுதாயத்தில் அறிவியலும் தொழிநுட்பமும் முழு நிலவு போன்று இல்லை
    3. நமது சமுதாயத்தில் அறிவியலும் தொழிநுட்பமும் பரந்த அளவில் அறிமுகமாக வேண்டும்
    4. நமது சமுதாயத்தில் அறிவியலும் தொழிநுட்பமும் மின்விளக்குப் போன்றன
  32. "கதைக்குப் பின்னே உள்ள கதாசிரியரின் கலையாற்றல், கற்பனைத்திறன், சொல்லாட்சி... இவ்வளவும் இலக்கண வரம்புகளை விடவும் மிகமிக முக்கியமானவையாகும்..." — ஆசிரியருக்கு உடன்பாடில்லாத கருத்து
    1. சிறுகதையில் இலக்கண வரம்புகளை விடவும் முக்கியமான விடயங்கள் உள்ளன
    2. சிறந்த சிறுகதையாசிரியர்கள் இலக்கண வரம்புகளைப் பற்றிச் சிந்திக்காமலே எழுதுவதுண்டு
    3. கதாசிரியர்களின் கலையாற்றல் கற்பனைத்திறன் சொல்லாட்சி முதலியன சிறுகதை இலக்கணத்தோடு சம்பந்தப்பட்டவையாகும்
    4. சிறுகதை இலக்கணத்தை அறிந்திருந்தும் அதனை மீறியும் சிறந்த சிறுகதைகளைப் படைக்கலாம்
  33. ஊருக்குள் புகுந்து அழிவு செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் இராணுவமும் வனவிலங்குத் திணைக்களமும் இணைந்து ______
    1. ஈடுபடுகிறார்கள்
    2. ஈடுபடுகிறது
    3. ஈடுபடுகின்றன
    4. ஈடுபட்டுவருகிறார்கள்
  34. மனிதனுக்கு கல்வியைவிட பணிவு, அன்பு, ஊக்கம் முதலான உயர்குணங்கள் ______
    1. முக்கியமானதாகும்
    2. முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
    3. முக்கியத்துவமுள்ளது
    4. முக்கியமானவையாகும்
  35. போதைவஸ்து பாவனை அதிகரிப்பால் நாடு எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக வருங்காலத்தில் ______ நடவடிக்கைகள் தொடர்பாகத் தீவிரமாக ஆராய வேண்டும்
    1. மேற்கொள்ளும்
    2. மேற்கொள்ளப்பட வேண்டிய
    3. மேற்கொண்ட
    4. மேற்கொண்டு
  36. கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆகிய ______ சமூகப் பிரக்ஞை உள்ளவர்களாகத் தொழிற்பட வேண்டும்
    1. கலைஞர்கள்
    2. அறிஞர்கள்
    3. இலக்கியவாதிகள்
    4. படைப்பாளிகள்
  37. நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய விருப்பு வெறுப்புக்களுக்கு ______ வாழ்ந்தால் நமது வாழ்க்கை அமைதி நிறைந்ததாக விளங்கும்
    1. அலட்சியம் செய்து
    2. இலட்சியம் செய்து
    3. மதிப்பளித்து
    4. ஒத்துழைத்து
  38. அவனுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொன்னேன்; ______ அவன் கேட்கவில்லை
    1. ஆனாலும்
    2. எனவே
    3. ஆகையால்
    4. அதை
  39. வீரமாமுனிவர், தமிழ் அகராதித்துறையின் ______ விளங்குகிறார்
    1. மூதாதையராக
    2. முன்னோடியாக
    3. முந்தையராக
    4. முன்னோராக
  40. கீழ்க்கண்ட வாக்கியங்களை ஒழுங்குபெற வைக்கும் பொருத்தமான வைப்புமுறை:
    அ. பனை ஏடுகளில் எழுத்தாணியால் எழுதுவது இலகுவானதன்று.
    ஆ. அதனால்தான் சுருக்கமாகச் சொல்வதற்கேற்ற செய்யுள் நடையை எம்முன்னோர்கள் கையாண்டார்கள் போலும்.
    இ. ஆனால் பண்டைக்காலத்தில் பனை ஏடும் எழுத்தாணியும் தவிர வேறு எழுதுகருவிகள் இல்லை.
    ஈ. இந்தக் காலத்தில் மிக வசதியாக எழுதத்தக்க எழுதுகருவிகள் ஏராளமாக உள்ளன.
    உ. ஆகையால் பண்டைக்காலத்தில் எழுத்து வேலையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டியிருந்தது.
    1. அ, ஆ, இ, ஈ, உ
    2. ஈ, இ, உ, அ, ஆ
    3. ஈ, இ, அ, உ, ஆ
    4. ஈ, உ, அ, ஆ, இ

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

← அனைத்து வினாத்தாள்களும்