📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
முகப்பு · சா/த · தமிழ் · பழைய வினாத்தாள்கள் · 2017

📄 சா/த தமிழ் — 2017 (டிசம்பர்)

விடைகள் பற்றி இவை உண்மையான வினாத்தாள் வினாக்கள். விடைகள் NIE பாடநூலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை — உத்தியோகபூர்வ விடைத்திட்டத்துடன் சரிபார்க்கவும்.

பகுதி II — கட்டமைப்பு வினாக்கள்

வினா 1 (கட்டாயம்). Paper II · இலக்கண வினாக்கள் — 10 உப வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
(i) பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக: 'மெலிந்தப் பிறைக்கும் விழி'

(ii) "புத்தகத்தை எடுத்துட்டு வூட்ட வா மனே" என்ற பேச்சு வழக்கு வாக்கியத்தை எழுத்து வழக்கில் மாற்றி எழுதுக.

(iii) "எழுவான் திசையை யாரேனும் சுட்டுவீராயின்..." — இங்கு 'எழுவான் திசை' என்பது எத்திசையைக் குறிக்கிறது?

(iv) "வேட்டைநாய் போல அவள் முன்னே ஓடிச் செல்கிறது நிழல்." — இதில் பயின்றுள்ள அணி யாது?

(v) 'ஒற்றைக்காலில் நிற்றல்' என்ற மரபுத்தொடர் குறிக்கும் பொருள் யாது?

(vi) "அப்பால் மூழ்கிற்று கதிர் நெடுங்கடலுள்." — இவ்வாக்கியத்திலுள்ள எழுவாய், பயனிலையை எடுத்துக்காட்டுக.

(vii) பின்வரும் வாக்கியத்துக்கு மிகப்பொருத்தமான நிறுத்தக்குறியினையிட்டு மீண்டும் எழுதுக:
"ஆகா மலையிலே வழிந்தோடும் நீரருவியின் அழகுதான் என்னே"

(viii) பின்வரும் வாக்கியங்களை இணைத்து ஒரே வாக்கியமாக்குக:
(அ) நான் கொழும்புக்குப் போனேன். (ஆ) நீ கொழும்புக்குப் போனாய்.

(ix) தரப்பட்ட கூட்ட நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துக:
பிரதம விருந்தினர் உரை, நன்றியுரை, தமிழ் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை

(x) பின்வரும் வாக்கியத்திலுள்ள வழுவை நீக்கி செம்மையாக மீண்டும் எழுதுக:
"கல்வி, செல்வம், வீரம், ஒழுக்கம் முதலானவை வாழ்க்கைக்கு முக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்."
வினா 2. Paper II · கட்டுரை / மேடைப்பேச்சு / உரையாடல் / சிறுகதை (25 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து ஏறத்தாழ 250 சொற்களில் தலையங்கமிட்டு எழுதுக:

(i) இன்று நமது நாட்டில் குப்பைகளை அகற்றுதல் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நமது நாட்டில் அவற்றை அகற்றுவதற்கான வழிமுறைகளைச் சரியான வகையில் நடைமுறைப்படுத்தாத காரணத்தால் நாம் பாரிய அனர்த்தங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே அவற்றைச் சரியான விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பான ஒரு விளக்கக் கட்டுரை.

(ii) 'ஆசிரியத்தொழில்' புனிதமானது. நமது அறிவுக்கண்களைத் திறப்பவர்களாகவும் நமது வளர்ச்சிக்கு ஏணிப்படிகளாகவும் ஆசிரியர்கள் விளங்குகின்றார்கள். ஆசிரியர்கள் தெய்வத்துக்குச் சமமானவர்கள். அவர்களை நாம் மதிக்க வேண்டும்; அவர்களது சேவைகளைப் பாராட்ட வேண்டும் என்ற பொருள்பட ஆசிரியர் தின விழாவில் நிகழ்த்தப்படும் ஒரு மேடைப்பேச்சு.

(iii) உல்லாசப் பயணிகளின் வருகையால் நாட்டின் வருமானம் அதிகரித்து நாடு முன்னேற்றமடையும் எனக் கருதும் ஒருவருக்கும், நாட்டின் பண்பாடு சீரழிவதுடன் போதைப்பொருள் பாவனை, நோய்த் தொற்றுகள் ஆகியன ஏற்பட்டு நாடு பாதிப்படையும் எனக் கருதும் மற்றொருவருக்குமிடையிலான ஒர் உரையாடல்.

(iv) 'இன்று அவளுக்குப் பாராட்டுவிழா... அவள் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக இந்த விழா நடைபெறுகிறது. ஆனால் இந்த நிலையை அடைவதற்காக அந்தச் சிறுமி பட்ட பாடுகள் சொல்லிலடங்கா...' என்ற கருப்பொருளிலமைந்த ஒரு சிறுகதை.
வினா 3 (கட்டாயம்). Paper II · சிலப்பதிகாரம் உரைப்பகுதி சுருக்கம் 40-45 சொற்கள் (10 புள்ளிகள்) த10·அ2
3. பின்வரும் உரைப்பகுதியின் சுருக்கத்தை 40-45 சொற்களில் அமையக்கூடியவாறு எழுதுக (சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக).

"சிலப்பதிகாரம் என்பது தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும். காவிரிப்பூம்பட்டினத்திலே பெருங்குடி வணிகர் குலத்தில் பிறந்த கற்புக்கரசி கண்ணகி, அவள் கணவன் கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை உரைப்பது. முத்தமிழ்ப் புலமையும் கவித்திறனும் வாய்ந்த இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. படிப்பவர் மனதைக் கவரும் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்தது. புகழ்மிக்க மூவேந்தர்களுடைய குளிர்ந்த சோலை என்று கருதப்படும் தமிழகத்தின் பகுதிகளாகிய சேர, சோழ, பாண்டிய நாட்டின் இயல்புகளையும் முறையே அவற்றின் தலைநகரங்களாகிய வஞ்சி, பூம்புகார், மதுரை என்பவற்றின் பெருமைகளையும் எடுத்துரைப்பது. அந்த நகரங்களிலிருந்து நல்லாட்சி புரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் தருமம், வீரம், அரசியல் முறைமை முதலியவற்றையும் அவர்களது ஆட்சியில் வாழ்ந்த மக்களின் ஒழுக்கம், ஊக்கம் ஆகியவற்றையும் நன்கு புலப்படுத்துவது. மற்றும் அக்கால உழவுத்தொழில், வணிகம், கைத்தொழில் பெருக்கம், அரசியல், கல்வி, சமய நிலை முதலானவற்றையும் அறிவதற்குச் சான்றாக உள்ளது. அரசியலில் தவறுவிடும் மன்னர்களை அறம் என்ற கடவுள் தண்டிப்பார்; கற்பில் சிறந்து விளங்கும் பெண்களை அனைவரும் போற்றுவர்; ஒருவர் ஒரு பிறவியில் செய்த வினைகள் அவரது பிறவிகள்தோறும் தொடரும் — ஆகிய மூன்று பெரும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது."
வினா 4 (கட்டாயம்). Paper II · பண்டைக்கால எழுத்து வழக்கு உரைநடை வினாக்கள் (10 புள்ளிகள்) த10·அ4
4. பின்வரும் உரைநடைப் பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

"பேபைரஸ், தோல், பனையோலை ஆகிய பண்டைக் காலத்து எழுதுகருவிகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறியீடுகளைக் கொண்டிருக்கவில்லை. அன்றியும் சொற்களைத் தனித்தனியே பிரித்தெழுதாமல் ஒரே கோவையாக எழுத்துக்கள் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதப்பட்ட சுவடிகளைப் படிப்பது கடினமாகவும் வருத்தமாகவும் இருந்தது. பழக்கப்பட்டவர்கள் மட்டுமே அவற்றைப் படிக்க முடியும். பழக்கப்பட்டவர்களுக்கும் தொடரைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. மேல்நாட்டார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சொற்களைப் பிரித்து எழுதத் தொடங்கினார்கள்; இன்னும் பிற்காலத்தில் புள்ளிகள் முதலிய குறியீடுகளை வழங்கினார்கள். நமது நாட்டு ஓலைச்சுவடிகளில் முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகள் அமைக்கப்படவில்லை."

(i) பண்டைக்காலத்தில் எழுதுகருவிகளாகப் பயன்பட்டவை யாவை?
(ii) பண்டைக்காலத்தில் எழுதப்பட்ட சுவடிகளைப் படிப்பது கடினமானதாக இருந்தமைக்கான காரணங்கள் யாவை?
(iii) எழுத்து வழக்கில் குறியீடுகளை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் யார்?
(iv) சுவடிகள் படிப்பதை இலகுவாக்க முதலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாது?
(v) இப்பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்தக்குறிகள் எவை?
வினா 5. Paper II · அழைப்புக் கடிதம் அல்லது துண்டுப்பிரசுரம் (15 புள்ளிகள்) த10·அ3
5. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்க:

(i) உமது பாடசாலையில் சுவாமி விபுலாநந்தரது 125-ஆவது ஜனன தின விழா கொண்டாடப்படவுள்ளது. உம்மை பாடசாலையின் தமிழ்மன்றச் செயலாளர் எனக் கருதிக்கொண்டு, விழா தொடர்பான விவரங்கள், கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றைக் குறிப்பிட்டு அவ்விழாவிற்குப் பிரதம விருந்தினராக வருகை தருமாறும் விபுலாநந்தரது இலக்கிய முயற்சிகள் பற்றி உரையாற்றுமாறும் கேட்டு, பல்கலைக்கழகமொன்றின் துணைவேந்தருக்கு 100 சொற்களில் ஒர் அழைப்புக் கடிதம் எழுதுக.

(ii) நாம் வாழும் சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருத்தல், சுத்தமாக வைத்திருக்காவிடின் ஏற்படும் பாதகமான விளைவுகள், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசுடன் இணைந்து நாமும் பிற சமூக அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 100 சொற்களில் ஒரு துண்டுப்பிரசுரம் எழுதுக.
வினா 6 (கட்டாயம்). Paper III · சுருக்கமான விடை — இலக்கியம் (20 புள்ளிகள்) த10·அ4
1. சுருக்கமான விடை தருக:

(i) "விதியை நோக்கி தம் நண்பரைத் தூற்றுவர்; வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்."
(அ) இக்கூற்றைக் கூறியவர் யார்?
(ஆ) 'வெகுளி' என்பதன் பொருள் யாது?

(ii) "ஏமிரோ வோரி என்பாள்" "எந்துண்டி வஸ்தி என்பாள்"
(அ) இக்கூற்று இடம்பெறும் சிறுகதை யாது?
(ஆ) யாருடைய கூற்றாக இது அமைகிறது?

(iii) "மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு."
(அ) மடைத்தலை என்பது யாது?
(ஆ) வாடியிருக்கும் கொக்கு யாருக்கு உவமையாகக் கூறப்படுகிறது?

(iv) "ஆடிக்குடத்தடையு மாடும்போதே இரையும் மூடித்திறக்கின் முகங்காட்டும்"
(அ) இதில் கையாளப்பட்டுள்ள அணி யாது?
(ஆ) அந்த அணி மூலம் தொடர்புபடுத்தப்படுபவை எவை?

(v) "கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை யிடிப்போம்"
(அ) மேற்குறித்த செயல்களைச் செய்பவர்கள் யார்?
(ஆ) 'கிம்புரியின் கொம்பு' என்பது எதனைக் குறிக்கிறது?

(vi) "வளர்ந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை நாறு வாராமற் காரும் ஐயனாரே"
(அ) இப்பாடல் எத்தொழிலோடு தொடர்புபட்டது?
(ஆ) இப்பகுதியில் இடம்பெற்றுள்ள கிராமிய நம்பிக்கை யாது?

(vii) "உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்"
(அ) இங்கு குறிப்பிடப்படும் 'உயிருடன் சென்ற ஒரு மகள்' யார்?
(ஆ) 'செயிருடன் வந்த சேயிழை' யார்?
வினா 7 (கட்டாயம்). Paper III · கவிதை/உரைநடை பகுப்பாய்வு (20 புள்ளிகள்) த11·அ9
2. பின்வரும் செய்யுட் பகுதிகளையும் உரைநடைப் பகுதிகளையும் வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

(a) "இப்போது சினிமா மொழி நமக்குப் பரிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது."
(அ) 'பரிச்சயம்' என்பதன் பொருள் யாது?
(ஆ) சினிமா மொழியில் உள்ள மூன்று அம்சங்களுள் ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடுக.

(b) "தத்தை விடு தாது!" — (தி.த. கனகசுந்தரம்பிள்ளை)
(அ) 'தத்தை' என்பதன் பொருள் யாது?
(ஆ) 'தத்தை விடு தாது' என்ற செய்யுளில் ஆசிரியர் யாருடைய விடுதலை பற்றிக் குறிப்பிடுகிறார்?

(c) "அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர் கொளார்."
(அ) இங்கு 'எந்தை' என்று குறிப்பிடப்படுபவர் யார்?
(ஆ) இங்கு குறிப்பிடப்படும் குன்றின் பெயர் யாது?

(d) தேம்படு பனையின் நிரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவற் கிருக்க நிழலா காதே
தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர் கயத்துட் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே
அதனால் பெரியோரெல்லாம் பெரியருமல்லர் சிறியோரெல்லாம் சிறியருமல்லர்.
(அ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நாற்படைகள் எவை?
(ஆ) இப்பாடல் உணர்த்தும் உண்மை யாது?

(e) சூழ மேதி யிறங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும்ப லாக்கனி வாழையிற் சாய வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல் தாழை சோறிட வாழை குருத்திடுஞ்
சந்திர சூடர்தென் னாரிய நாடே.
(அ) இப்பாடலில் நாட்டு வளத்தை விவரிப்பதற்கு எடுத்தாளப்பட்டுள்ள விடயங்கள் யாவை?
(ஆ) இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமையின் பொருத்தப்பாட்டினை விளக்குக.

(f) தம்மனைக்கோர் பசுவேண்டிற் நாம்பலகாற் பார்த்திருந்தும் பின்னுந் துணிவிலராய்ப்
பேதுறுதல் மாந்தர் குணம் என்னே மணவினையேலிமைப்பொழுதி லேமுடிப்பார்
சின்னப் பதுமைகொடு சிறார்செய்மணம் போலுமரோ தெரிவையவட் கிம்மாற்றஞ்
சீரக்கிளியே கூறுதியால்
(அ) இப்பாடலில் கவிஞர் மாந்தரது குணத்தை எவ்வாறு கண்டிக்கிறார்?
(ஆ) அவசரமாய் செய்யும் திருமணத்தை எதற்கு உவமிக்கிறார்?

(g) "கைவேல் - எறிகிறவேல் - இறகுள்ள அம்பு - இல்லாத அம்பு - வாள் - சக்கரம் — இவற்றிற்கு மேலே தெய்வப் படைகளிலும் கைவைக்கின்ற சமயம்; அந்தச் சமயம் பிறிற்றோ கட்சிக்குப் பேச வந்தவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள பிரபல வழக்கறிஞர்கள், வாதம் இல்லா இடத்திலும் வாதம் வருவிக்கக்கூடியவர்கள். நாவலர் அவர்களின் காசம் அவர்களுக்கு எதிர்பாராத அனுகூலம் அளித்தது. பிறிற்றோவை ஆகாசத்திலே தூக்கிக்கொண்டு போய் வைத்துவிட்டார்கள் அவர்கள். இராமநாதன் கட்சி சோர்ந்து போய்விட்டது."
(அ) வாதம் உச்சக்கட்டம் அடைந்துவிட்டதை ஆசிரியர் எவ்வாறு விவரிக்கிறார்?
(ஆ) 'வாதம் இல்லா இடத்திலும் வாதம் வருவிக்கக்கூடியவர்கள்' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

(h) "நாம் இலக்கியங்களைப் படிக்கின்றோம். அங்கே என்ன காண்கின்றோம்? இலட்சியங்களைக் காண்கின்றோம். இலட்சியங்களைக் கடைப்பிடித்தொழுகிய இலட்சியவாதிகளைக் காண்கின்றோம். எதிர்மறை முகத்தால் இலட்சிய வாழ்வினை உயிர்பெறச் செய்த ஏனையோரையும் காண்கின்றோம். நிறைவுடைய கதாபாத்திரங்களும் குறைவுடைய கதாபாத்திரங்களும் நம்மை இலட்சியமென்கின்ற குறிக்கோளை நோக்கிச் செலுத்துவதை நாம் இலக்கியங்கள் வாயிலாக உணர்ந்துகொள்கின்றோம். இந்த உணர்ச்சி நம்மிடையே பிறவாதபோது நாம் இலக்கியங்கொண்டு இடர்ப்படுவோமேயன்றி இன்பங்காண்பதில்லை. இலக்கியத்திறவுகோலை நாம் பெறுதல் வேண்டும். பெற்றால் இன்பங்காண்போம்."
(அ) இங்கு 'இலட்சியவாதிகள்' யார் என்று கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்?
(ஆ) இலக்கியத்தில் இன்பம் காண்பதற்கு யாது செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்?
வினா 8 (கட்டாயம்). Paper III · பாரதியார் சுயசரிதை அல்லது கிருட்டினன்தூது (15 புள்ளிகள்) த11·அ9
3. பாரதியார் சுயசரிதையில்,
(அ) காதலியை எதிர்பார்த்தலும் அவளின் பார்வை கிட்டியதில் ஏற்பட்ட மகிழ்வும்
(ஆ) முயற்சியில் முழுமனதோடு ஈடுபடாது தோல்வியைத் தழுவுவோரின் நடத்தைகளும்
விவரிக்கப்படுமாற்றினை விளக்குக.

அல்லது

கிருட்டினன்தூதுச் சருக்கத்தில்,
(அ) தருமனுடைய பொறுமையும்
(ஆ) வீமனின் ஆவேசமும்
வெளிப்படுமாற்றினை விவரிக்குக.
வினா 9 (கட்டாயம்). Paper III · மூத்தம்மா சிறுகதை அல்லது அற்றைத்திங்கள் நாடகம் (15 புள்ளிகள்) த11·அ9
4. 'மூத்தம்மா' என்ற சிறுகதையில்,
(அ) கதைக்கள வர்ணனை
(ஆ) மூத்தம்மா என்ற பாத்திரப் படைப்பு
என்பன அமைந்திருக்கும் விதத்தை விளக்குக.

அல்லது

'அற்றைத்திங்கள்' என்ற நாடகத்தில்,
(அ) புலப்பெயர்வின் அவலம்
(ஆ) நாடகாசிரியரின் படைப்பாற்றல்
என்பன புலப்படுமாற்றினை விளக்குக.
வினா 10. Paper III · "தேயிலைத் தோட்டத்திலே" கவிதை (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
5. 'தேயிலைத் தோட்டத்திலே' என்ற கவிதையில்,
(அ) தொழிலாளரின் உழைப்பும்
(ஆ) அவர்கள் மீதான கவிஞரின் பரிவும்
வெளிப்படுமாற்றை விளக்குக.
வினா 11. Paper III · "பங்கப் பழனத்து..." பாடல் (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
6. 'பங்கப் பழனத்து...' என்று தொடங்கும் பாடலில்,
(அ) நாட்டுவனம், மன்னனின் ஆற்றல் என்பனவும்
(ஆ) தலைவன்மீது தலைவி கொண்ட காதலும்
விவரிக்கப்படுமாற்றினை எடுத்துக்காட்டுக.
வினா 12. Paper III · "தமிழ்ப் பண்பாடு" கட்டுரை (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ9
7. 'தமிழ்ப் பண்பாடு' என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு,
(அ) தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்கள் யாவை எனக் குறிப்பிடுக.
(ஆ) அவற்றுள் உலக மனப்பான்மை என்ற பண்பாடு பற்றி விவரிக்குக.

பகுதி I — புறவய வினாக்கள் (MCQ)

MCQ விடைகள் புறவய விடைகள் உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் சரிபார்க்கவும். ✓ குறி திட்டமிட்ட விடையை மட்டும் குறிக்கிறது.
  1. 'முழங்கு **திரைப்** புனலருவி...' — இங்கு **திரை** என்பது:
    1. மறைப்பு
    2. ஆடை
    3. அலை
    4. கடல்
  2. '**பங்கப்** பழனத்து துழுமுழவர்...' — இங்கு **பங்கம்** என்பது:
    1. தாமரை
    2. பாதிப்பு
    3. பங்கீடு
    4. சேறு
  3. 'நாயனையார் **கேண்மை** தழீஇக் கொளல் வேண்டும்.' — **கேண்மை** என்பதன் எதிர்க்கருத்து:
    1. கேட்காமை
    2. நன்மை
    3. தீமை
    4. பகைமை
  4. 'நாவலர் அவர்களின் காசம் அவர்களுக்கு எதிர்பாராத **அனுகூலம்** அளித்தது.' — **அனுகூலம்** என்பதன் எதிர்க்கருத்து:
    1. பிரதிகூலம்
    2. நிர்மூலம்
    3. ஊனம்
    4. சகுனம்
  5. 'பகல் **பல மூல சாகம்** நுகர்ந்து உயிர வாழ்தல் இனிது நன்றே.' — 'பல மூல சாகம்' என்னும் சொற்றொடரால் குறிப்பிடப்படுவன முறையே:
    1. கிழங்கு, பழம், இலை
    2. பழம், கிழங்கு, இலை
    3. இலை, பழம், கிழங்கு
    4. இலை, கிழங்கு, பழம்
  6. 'பாரிய வழக்குகளுக்கும் **அப்பீல்களுக்கும்** அவரை நியமிப்பது வழக்கம்.' — **அப்பீல்** என்பதற்கு நிகரான தமிழச் சொல்:
    1. முறையீடு
    2. குற்றச்சாட்டு
    3. மேன்முறையீடு
    4. பிடியாணை
  7. ஒத்தகருத்துள்ள சொற்களின் இணைப்பு:
    1. எதிர்வாதம் — பிரதிவாதம்
    2. மந்தமாருதம் — சண்டமாருதம்
    3. செளக்கியம் — அசெளக்கியம்
    4. கதி — நிர்க்கதி
  8. சினிமா, இலக்கியம் முதலான கலைத்துறைகளில் **சிம்பல்** (symbol) ஓர் உத்தியாக இடம்பெறுகிறது. — **சிம்பல்** என்பதற்கு நிகராகத் தமிழில் வழங்கும் கலைச்சொல்:
    1. வடிவம்
    2. குறியீடு
    3. படிமம்
    4. சின்னம்
  9. **ஒலி, பாம்பு** என்னும் பொருள்களைத் தரும் சொல்:
    1. பணி
    2. ஓசை
    3. சர்ப்பம்
    4. அரவம்
  10. 'பிடி' என்பது பெண் யானையைக் குறிப்பது போல, **பெண் குரங்கை** குறிக்கும் சொல்:
    1. கடுவன்
    2. பறழ்
    3. மந்தி
    4. பிணை
  11. பின்வருவனவற்றுள் **இணைமொழி அல்லாதது**:
    1. பச்சைப்பசேல்
    2. தோட்டந்துரவு
    3. சூதுவாது
    4. முன்னார் இனியார்
  12. **உற்சாகமூட்டல்** என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்:
    1. தட்டிப்பறித்தல்
    2. தட்டிக்கொடுத்தல்
    3. தட்டிப்பேசுதல்
    4. தட்டிப்பார்த்தல்
  13. புதிதாகச் செய்யப்பட்ட தேர், கப்பல் என்பவற்றை முதன்முதலாக ஓட்டிப்பார்த்தலைக் குறிக்கும் **மரபுச்சொல்**:
    1. வெள்ளோட்டம்
    2. ஒத்திகை
    3. அரங்கேற்றம்
    4. மேலோட்டம்
  14. அரசனுடைய **சபா மண்டபத்தை** குறிக்கும் சொல்:
    1. அந்தப்புரம்
    2. உப்பரிகை
    3. நிந்தகம்
    4. ஓலக்கம்
  15. தங்களைச் சார்ந்தவர்களின் குறைகள் பொருட்படுத்தப்படுவதில்லை என்பதை உணர்த்தும் **பழமொழி**:
    1. இக்கரைக்கு அக்கரை பச்சை
    2. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
    3. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
    4. தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்
  16. '**காலத்தே பயிர்செய்**' என்ற பழமொழியின் கருத்து:
    1. பயிரிடுவதற்கென்று காலம் வரையறுக்கப்பட்டுள்ளது
    2. உரிய காலத்தில் எதையும் செய்துவிட வேண்டும்
    3. பருவ காலங்கள் பயிர்ச்செய்கைக்கு உகந்தவை
    4. காலம் தவறிப் பயிர் செய்தால் விளைச்சல் குறையும்
  17. **பயனற்ற செயலை** உணர்த்தும் உவமைத்தொடர்:
    1. அணை கடந்த வெள்ளம் போல
    2. ஆனை வாயிற் கரும்பு போல
    3. ஆற்றிலே கரைத்த புளி போல
    4. ஆனை உண்ட விளாம்பழம் போல
  18. செழிப்போடு அழிவின்றி வாழ ஒருவரை வாழ்த்துவதற்குப் பொருத்தமான **அருஞ்சொற்றொடர்**:
    1. ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி
    2. கண்ணுக்குக் கண்ணாக
    3. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
    4. வைத்தகண் வாங்காமல் பார்த்துப் பார்த்து
  19. 'குறுகுறு நடந்து சிறுகை நீட்டி' — இங்கு **குறுகுறு** என்பது:
    1. அடுக்குத்தொடர்
    2. இணைமொழி
    3. ஒலிக்குறிப்புச்சொல்
    4. இரட்டைக்கிளவி
  20. 'ஆத்திரத்தோடு நண்பர் **அவுக்கென** எழும்பி வந்தார்.' — இங்கு **அவுக்கென** என்னும் ஒலிக்குறிப்புச் சொல் உணர்த்தும் பொருள்:
    1. கோபம்
    2. பயம்
    3. விரைவு
    4. ஆச்சரியம்
  21. **ககரம்** எந்தச் சொல்லில் 'K' என்னும் ஆங்கில எழுத்துக்கு நிகராக ஒலிக்கிறது?
    1. கடல்
    2. தங்கம்
    3. கதவு
    4. மேகம்
  22. பின்வருவனவற்றுள் **பகுபதம்**:
    1. பாடல்
    2. சிங்கம்
    3. களம்
    4. அன்பு
  23. பின்வருவனவற்றுள் **ஆக்க வினையடை**:
    1. நேற்று
    2. அங்கே
    3. விரைவாக
    4. காலையில்
  24. **ஓடு** என்னும் உருபு **அடைமொழிப் பொருளில்** இடம்பெற்ற தொடர்:
    1. அன்போடு பேசினான்
    2. பாலோடு கலந்தான்
    3. நண்பனோடு சென்றான்
    4. வீட்டோடு இருந்தான்
  25. **தோன்றல் விகாரப் புணர்ச்சி** இடம்பெற்ற சொல்:
    1. பலாப்பழம்
    2. மாடீரம்
    3. மரத்தடி
    4. மரக்கொப்பு
  26. 'பாடசாலைக்குச் செல்லவில்லை.' — இங்கு **செல்லவில்லை** என்பது:
    1. தன்மை வினைமுற்று
    2. படர்க்கை வினைமுற்று
    3. முன்னிலை வினைமுற்று
    4. மூவிடத்துக்கும் பொதுவான வினைமுற்று
  27. 'என்றலுமே அடியின்மிசை நெடிது வீழ்ந்து **அழுவானை**...' — இங்கு **அழுவான்** என்பது:
    1. தெரிநிலை வினைமுற்று
    2. குறிப்பு வினைமுற்று
    3. வினையாலணையும் பெயர்
    4. இடகுறிச் சிறப்புப்பெயர்
  28. **அகராதி ஒழுங்கில் அமையாத** சொற்றொகுதி:
    1. காடு, நாடு, பாடு, வாடு
    2. ஞாயிறு, சந்திரன், சூரியன், செவ்வாய்
    3. கட்டில், சட்டி, தாய், நாடு
    4. வாய்க்கால், விலை, வேர்க்கடலை, வெளவால்
  29. **பொருத்தமற்ற உதாரணம்** இடம்பெற்ற தொகுதி:
    1. பெயர்ச்சொல்: பால், மரம், மாலை
    2. வினைச்சொல்: வந்தான், இல்லை, விழுந்த
    3. பெயரெச்சம்: வந்த, பாடுகின்ற, விழுந்து
    4. வினையெச்சம்: ஓடி, படித்து, பாடுவதற்கு
  30. **பொருத்தமற்ற உதாரணம்** இடம்பெற்ற தொகுதி:
    1. வேற்றுமைத்தொகை: மரம் தறித்தான், பாடசாலை சென்றான், தங்க வளையல்
    2. வினைத்தொகை: ஏவுகணை, ஓடுமீன், சுடுசோறு
    3. பண்புத்தொகை: கரும்பலகை, வெண்மேகம், செந்தாமரை
    4. உம்மைத்தொகை: வெற்றிலை பாக்கு, பழப்பாக்கு, பாக்கு வெற்றிலை
  31. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பலர் தமது ___________ செலுத்தினர்:
    1. சந்தாப்பணத்தை
    2. கட்டூப்பணத்தை
    3. முற்பணத்தை
    4. சலுகைப்பணத்தை
  32. வரவுசெலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் புதிய ___________ விதிக்கவுள்ளது:
    1. பிரேரணைகளை
    2. கடன்களை
    3. மானியங்களை
    4. வரிகளை
  33. விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு உர ___________ வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது:
    1. நிவாரணம்
    2. மானியம்
    3. ஊதியம்
    4. சன்மானம்
  34. இராஜராஜ சோழனுடைய பெருமைகளை எடுத்துரைக்கின்ற பல ___________ சாசனங்களிலே காணப்படுகின்றன:
    1. ஆவணங்கள்
    2. புனைந்துரைகள்
    3. கீத்தனைகள்
    4. மெய்க்கீரத்திகள்
  35. உலகிலுள்ள தொழில் ஒவ்வொன்றும் தனித்துவமானதும் அத்தியாவசியமானதுமாக ___________:
    1. விளங்குகின்றன
    2. விளங்குகின்றது
    3. அமைகின்றன
    4. கொள்ள வேண்டியன
  36. மாணவர் குழுக்கள் ஊரூராகச் சென்று வெள்ள நிவாரணத்துக்காக பொருள்களையும் பணத்தையும் ___________:
    1. சேகரித்தன
    2. சேர்த்தார்கள்
    3. சேர்த்தார்
    4. சேகரித்தனர்
  37. தென்னங்குரும்பைபோல் தலையே... தாவிச் செல்லும் துள்ளும் அணிற்பிள்ளை — இக்கவிஞர் கூறுவது அணிற்பிள்ளையின்:
    1. தோற்றம் பற்றி
    2. செயற்பாடு பற்றி
    3. தோற்றமும் செயலும் பற்றி
    4. சுறுசுறுப்பு பற்றி
  38. இப்பாடலில் (அணிற்பிள்ளை) எத்தனை **உவமைகள்** இடம்பெற்றுள்ளன?
    1. இரண்டு
    2. மூன்று
    3. நான்கு
    4. ஐந்து
  39. இப்பாடலில் **'கன்னங்கரிய'** என்பது:
    1. அடுக்குத்தொடர்
    2. இணைமொழித்தொடர்
    3. உவமைத்தொடர்
    4. அடுக்கிடுக்குத்தொடர்
  40. கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன — சரியான வைப்பு முறை:
    அ — இன்பம் வரும்போது மகிழ்கிறோம்.
    ஆ — அந்த இரண்டும் எல்லோரது வாழ்க்கையிலும் வந்து போகின்றன.
    இ — ஆனால் துன்பம் வரும்போது துவண்டுவிடுகிறோம்.
    ஈ — இன்பமும் துன்பமும் கலந்ததே உலகம்.
    உ — அவ்வாறன்றி இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றால் வாழ்க்கை அமைதி நிறைந்ததாய் அமையும்.
    1. அ, ஆ, உ, இ, ஈ
    2. ஈ, அ, இ, உ, ஆ
    3. ஈ, ஆ, அ, இ, உ
    4. ஆ, ஈ, உ, அ, இ

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

← அனைத்து வினாத்தாள்களும்