📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
முகப்பு · சா/த · தமிழ் · பழைய வினாத்தாள்கள் · 2024

📄 சா/த தமிழ் — 2024 (2025)

விடைகள் பற்றி இவை உண்மையான வினாத்தாள் வினாக்கள். விடைகள் NIE பாடநூலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை — உத்தியோகபூர்வ விடைத்திட்டத்துடன் சரிபார்க்கவும்.

பகுதி II — கட்டமைப்பு வினாக்கள்

வினா 1 (கட்டாயம்). Paper I · இலக்கண வினாக்கள் — 10 உப வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
(i) "தண்டாமரையுடன் பிறந்தும் தண்டேன்றுகரா மண்டூகம்" — இவ்வாக்கியத்தில் எழுவாய் எது? பயனிலை எது?
(ii) "வீழுமோரிடையூறு" — இதனைப் பதம் பிரித்து எழுதுக.
(iii) "புத்தகத்தை எடுத்துட்டு வூட்ட வா மனே" — இவ்வாக்கியத்தை எழுத்துவழக்கில் எழுதுக.
(iv) "அவன் அறிவிலே மேம்பட்டவன் ஒழுக்கத்திலும் மேம்பட்டவன்" — பொருத்தமான நிறுத்தற்குறியை இடுக.
(v) "நேற்று விபத்து நடந்தது. அதனால் சாலை மூடப்பட்டது." — இரு வாக்கியங்களை இணைக்கும் இணைப்பிடைச் சொல்லை எழுதுக.
(vi) "வரும்" — இச்சொல்லை வினைமுற்றாகவும் பெயரெச்சமாகவும் பயன்படுத்தி வாக்கியம் எழுதுக.
(vii) பிழையுள்ள சொற்களை சரிசெய்க: "அந்நியச்செலவாணி", "செலவீனம்".
(viii) "நாடு" என்ற சொல்லை பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தி வாக்கியம் எழுதுக.
(ix) மெய்/வாய்/கண்/மூக்கு/செவி — சுவை/ஒளி/ஊறு/ஓசை/நாற்றம் இணைத்து தொகைச் சொற்களாக எழுதுக.
(x) கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உள்ள இலக்கணப் பிழையை திருத்தி எழுதுக.
வினா 2. Paper I · கட்டுரை / உரையாடல் / மேடைப்பேச்சு / சிறுகதை — ஒன்றை தேர்க (25 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றை தேர்வுசெய்து ~250 சொற்களில் தலையங்கமிட்டு எழுதுக:

(i) நமது நாட்டில் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது; நிபுணத்துவ வைத்தியர்கள் பலர் உள்ளனர். அதேவேளை மருந்துத்தட்டுப்பாடு, கிராமப்புறங்களில் வைத்தியர்களின் போதாமை, தரமற்ற மருந்துகளின் இறக்குமதி ஆகிய குறைபாடுகளும் நிலவுகின்றன. இவ்விடயங்களை உள்ளடக்கிய ஒரு விளக்கக் கட்டுரை.

(ii) தனது இடைநிலைக் கல்வியை முடித்துக்கொண்டு வெளிநாடு சென்று வேலை தேடும் இளைஞனுக்கும், இங்கேயே அரச உத்தியோகம் அல்லது சுயவேலை செய்யும் நண்பனுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல்.

(iii) ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறுவது இன்றியமையாதது. தேர்தல் மூலம் மக்களது ஜனநாயக உரிமை பாதுகாக்கப்படுகிறது; புதியதொரு அரசைத் தெரிவுசெய்ய முடிகிறது. தேர்தலின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் வலியுறுத்தி பாடசாலை மாணவர் மன்றத்தில் நீர் நிகழ்த்தும் மேடைப்பேச்சு.

(iv) குமரனும் விமலனும் மாணவப் பருவத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள். பாடசாலை வாழ்க்கை முடிந்த பின்னரும் நட்புத் தொடர்ந்தது. ஆனால் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றினால் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக பல ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளாத நிலை ஏற்பட்டது. இப்போது நடைபெற ஏற்பாடாகியுள்ள "மீண்டும் பள்ளிக்கு" நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொள்கின்றனர். நட்பின் வலிமையை வெளிப்படுத்தும் சிறுகதை.
வினா 3 (கட்டாயம்). Paper I · உரைப்பகுதி சுருக்கம் — 40-45 சொற்கள் (10 புள்ளிகள்) த10·அ2
பின்வரும் உரைப்பகுதியின் சுருக்கத்தை 40-45 சொற்களில் அமையக்கூடியவாறு எழுதுக (சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக):

"ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று உழைப்பில் நம்பிக்கையில்லாதவர்கள்தான் சொல்வார்கள். உண்மையில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் உழைப்புத்தான் முழுப்பங்கு வகிக்கிறது. புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால் 'உழைப்பு! இடைவிடாத உழைப்பு!' என்பதே அவர்களது தாரக மந்திரமாக இருந்தது என அறியலாம். சோர்வு இல்லாத இடத்தில்தான் செல்வம் வந்து சேரும். ஒரு செயலைப் பிற்போடுதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும் நல்வாழ்க்கை வாழ்வதற்கு முட்டுக்கட்டைகள் ஆகும். அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால்தான் வெற்றி பெற முடியும்."
வினா 4 (கட்டாயம்). Paper I · வாசிப்புப் புரிதல் — போட்டி (10 புள்ளிகள்)
பின்வரும் உரைப்பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

"போட்டி, போட்டி, போட்டி; எங்கும் போட்டி, எதிலும் போட்டி. இது நாகரிகத்தின் இயல்பாகிவிட்டது. இப்போட்டிகளாலே வாழ்க்கை அமைதி இழந்து வருகிறது. காந்தியடிகள் போட்டியை விரும்பாதவர். எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்ற தெளிவுபெற்ற அவருடைய உள்ளம் போட்டிகளுக்கு இடந்தரவில்லை. மனித இனமானது புதுப்புதுக் கருவிகளைப் பெற்று வாழ்க்கைச் சுமைகளைக் குறைத்து அமைதி பெறுமென விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால் மனித மனம் எளிமையை நாடவில்லை. இரண்டு கையுடையவன் மூன்று மூட்டைகள் சுமக்க விரும்பினான்; மூன்றாவதாகக் கைபெற்றால் நான்காந்து மூட்டைகள் சுமக்க அவாப்பட்டான். அமைதியின் விழுப்பத்தை உணர்த்தவே அன்று ஓர் இளவரசர் அரச மாளிகையைத் துறந்து புத்தராக போதிமர நிழலை அடைந்தார்."

(0) நாகரிகத்தின் இயல்பாக இங்கு சுட்டப்பெறுவது யாது?
(4) விஞ்ஞானிகளது எதிர்பார்ப்பு யாது?
(iii) அமைதியின் பெருமையறிந்த சான்றோராக இங்கு குறிப்பிடப்படும் இருவரும் யாவர்?
(iv) மனிதரின் எல்லையற்ற ஆசையை எடுத்துக்காட்டும் வசனத்தை எழுதுக.
(v) வாழ்வின் அடிப்படையாக இங்கே கருதப்படுவது யாது?
வினா 5. Paper I · கடிதம் அல்லது அறிக்கை — ஒன்றை தேர்க (15 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றை தேர்வுசெய்க:

(i) தொடர்ந்து பெய்த மழை காரணமாக பாலையூர் பிரதேச விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நட்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி, பாலையூர் விவசாயக் கழகச் செயலாளர் எம். எம். கமால் என உம்மைக் கருதி, அப்பிரதேச இடர் முகாமைத்துவ நிலையப் பணிப்பாளருக்கு 100 சொற்களில் கடிதம் எழுதுக.

அல்லது

(ii) கடந்த வாரம் அறிவொளி மகாவித்தியாலயத்தில் கல்விக் கண்காட்சி இடம்பெற்றது. ஒழுங்கமைப்புக் குழுவின் செயலாளர் ஸ். பூங்கோதை என உம்மைக் கருதி, பாடசாலை அதிபருக்கு, (அ) காலம், இடம் (ஆ) பிரதம விருந்தினர் வருகை (இ) வெவ்வேறு துறைகளும் காட்சிப்பொருட்களும் ஆகியவற்றை உள்ளடக்கிய 100 சொற்கள் அறிக்கை எழுதுக.
வினா 6 (கட்டாயம்). Paper II · சுருக்கமான விடை — கவிதை/உரைநடை (20 புள்ளிகள்) த10·அ4
1. சுருக்கமான விடை தருக:

(1) "தெண்ணீர்க் கயத்துட் சிறுமீன் சினையினும் நுண்ணிதே"
(அ) சினை என்பதன் பொருள்? (ஆ) நுண்ணிது என்பதன் பொருள்?

(2) "பிரசண்ட மாருதத்துக்குப் பிறகு என்று சொல்லுகிற 'பிறகு' அந்தச் சபையில் நிலவியது"
(அ) பிரசண்ட மாருதம் என்றால் என்ன? (ஆ) இங்கு "பிறகு" என்ற சொல்லால் குறிப்பிடப்படுவது யாது?

(3) "கைபில் அகல செம்புக் காப்புக்களென அமர்க்களமாய் பார்க்க அம்சமாய் இருப்பா"
(அ) அமர்க்களம் என்பதன் நேர்ப்பொருள்? (ஆ) அது இங்கே என்ன பொருளில் வழங்குகிறது?

(4) "வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே"
(அ) பிறையை "வெங்கட் பிறை" என்று கூறுவதன் காரணம்? (ஆ) இதிலுள்ள அணியை இனங்கண்டு விளக்குக.

(5) "கடுமையார் கானகத்துக் கருணையார் கலி ஏக"
(அ) கடுமையார் கானகத்துக்கு ஏகியவரின் பெயர்? (ஆ) இங்கு "கலி" என்பதன் பொருள்?

(6) "இப்போ இந்த மலையைப் பிரிவது மலையைவிடக் கூடுதலாகக் கனக்கிறதே, ஆனால், என் அருமைச் செல்வங்களே... புறப்பட வேண்டியதுதான்."
(அ) பறம்பு மலையைப் பிரிவதில் உள்ள வேதனை எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது? (ஆ) நிர்ப்பந்தத்தை உணர்த்தும் தொடர் யாது?

(7) (ராம) "அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே"
(அ) இக்கூற்று யாரால் கூறப்பட்டது? (ஆ) எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது?

(8) "அன்னநடை மைவிழியா ளம்பொன்மலர்க் கொம்பனையாள் என்னிதய தாமரைக்கோ ரிலக்குமியாம்"
(அ) உவமையணி ஒன்றை இனங்கண்டு குறிப்பிடுக. (ஆ) உருவக அணி ஒன்றை இனங்கண்டு குறிப்பிடுக.

(9) "மறையென லறியா மாயமி லாயம்"
(அ) "ஆயம்" என்ற சொல் யாரைச் சுட்டுகிறது? (ஆ) அந்த ஆயத்தின் சிறப்பு எவ்வாறு வெளிப்படுகிறது?

(10) "ஏர் தழைக்கவேணும் தம்பிரானே எல்லோரும் வாழவேணும் தம்பிரானே"
(அ) "ஏர்" என்பதற்கு நிகரான சொல்? (ஆ) "ஏர் தழைக்க வேணும்" என்பதால் உணர்த்தப்படுவது?
வினா 7 (கட்டாயம்). Paper II · கவிதை/உரைநடை பகுப்பாய்வு (20 புள்ளிகள்) த10·அ4
2. பின்வரும் செய்யுட் பகுதிகளையும் உரைநடைப் பகுதிகளையும் வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

(i) வயிரம் எனும் சுடுநெருப்பை மிகமூட்டி
வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு
திறத்தேமும் சென்று மாள்வோம்
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக்
குருநாட்டில் கலந்து வாழ
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான்
அறத்தின் உருவம் போல்வான்.
(அ) பகைவளர்க்கின் இரு பக்கத்தாரும் அழிந்துபடுவர் என்பதை வெளிப்படுத்தும் உவமை?
(ஆ) "சந்துபட உரைத்தருள்" என்ற தொடரை விளக்குக.

(ii) ஆடிக் குடத்தடையும் ஆடும்போதேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் — ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண்ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம்பெள்ளெனவேயோது.
(அ) சிலேடையாக இங்கே ஒப்பிடப்படுவன யாவை?
(ஆ) இந்த ஒப்பீடு பொருத்தமாக அமையும் தன்மையை விளக்குக.

(iii) "சேர். பொன். இராமநாதன் துரைக்கு அப்போது இருபத்தைந்து வயசு. சிரித்த முகம்; தங்க சொரூபம்; அப்பொழுதுதான் சென்னைப் பட்டணத்திலிருந்து படித்துவிட்டு வந்தவர். யாழ்ப்பாணத்தவரேயாயினும் யாழ்ப்பாணத்தவர்க்கு அவரைப் பற்றி ஒன்றுந் தெரியாது. பிறிற்றோ என்பவர் பிரசித்திபெற்ற வழக்கறிஞர். இலங்கையிலேயுள்ள எல்லாரும் அவரை அறிவர். பாரிய வழக்குகளுக்கும் அப்பீல்களுக்கும் அவரை நியமிப்பது வழக்கம்."
(அ) "பிறிற்றோ பிரசித்திபெற்ற வழக்கறிஞர்" என்பது எவ்வாறு உணர்த்தப்படுகிறது?
(ஆ) சேர். பொன். இராமநாதனின் பிரசித்தமின்மையும் பிறிற்றோவின் பிரசித்தமும் பற்றிய விபரிப்பு நாவலரின் வாதத் திறமையை எவ்வகையில் உணர்த்துகிறது?

(iv) "இலட்சியவாதிகளின் தூலவடிவங்கள் மறைந்தாலும் இலட்சியங்கள் மறைந்து போவதில்லை. அவை நம்முள்ளத்தே கலந்து நம்மை ஆட்கொண்டு நிற்கின்றன... உண்மை இலக்கியங்கள் புதுமை பெற்று உள்ளங்களைத் தளிர்த்து மலரச்செய்கின்றன."
(அ) "தூலவடிவில் நின்றும் மறைந்த இலட்சிய புருடர்களை சூக்கும வடிவில் அமைத்துக் காட்டுகின்றார்கள்" என்பதால் உணர்த்தப்படுவது?
(ஆ) "இலட்சியங்களும் இலட்சியவாதிகளும் அபின்னம்" என்ற தொடரை விளக்குக.
வினா 8 (கட்டாயம்). Paper II · கம்பராமாயணம் குகப்படலம் அல்லது தத்தைவிடு தூது (15 புள்ளிகள்) த10·அ4
3. கம்பராமாயணம் குகப் படலத்தில்,
(அ) கோசலையின் பெருமை
(ஆ) பாத்திர உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கம்பன் காட்டும் திறன்
ஆகியன வெளிப்படுமாற்றை விளக்குக.

அல்லது

"தத்தைவிடு தூது" பகுதியில்,
(அ) அக்கால சமூகம் பெண்களை துழைமைப்படுத்திய விதம்
(ஆ) அச்சமூகத்தின்மீது தலைவன் கொண்ட கோபம்
என்பன வெளிப்படுமாற்றை விளக்குக.
வினா 9 (கட்டாயம்). Paper II · "கம்பியூட்டர்" சிறுகதை அல்லது "எது நல்ல சினிமா" கட்டுரை (15 புள்ளிகள்) த11·அ9
4. "கம்பியூட்டர்" என்ற சிறுகதையில், "தாத்தாசொல்லிக்கு",
(அ) கம்பியூட்டர் பற்றிய பரிச்சயமின்மை
(ஆ) கம்பியூட்டர் பற்றிய அறிவை அவர் பெற்றுக்கொண்ட வகை
புலப்படுத்தப்படுமாற்றை விளக்குக.

அல்லது

"எது நல்ல சினிமா" என்ற கட்டுரையில்
(அ) ஆரம்பகாலத் தமிழ்ச் சினிமாவின் இயல்புகள்
(ஆ) நல்ல சினிமாவுக்கு அவசியமான தொழினுட்ப உத்திகள்
ஆகியவை புலப்படுத்தப்பட்டுள்ள விதத்தினை விளக்குக.
வினா 10. Paper II · பாரதியார் "சுயசரிதை" — உவமைகளின் பொருத்தப்பாடு (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த10·அ2
5. பாரதியார், தனது "சுயசரிதை" யில்,
(அ) தன் காதலியின் வரவுக்காக தினந்தோறும் காத்திருந்தமை
(ஆ) அவள் போகும் இடமெல்லாம் அவளைப் பின் தொடர்ந்தமை
ஆகிய தனது செயற்பாடுகளை விபரிப்பதற்குக் கையாண்ட உவமைகளின் பொருத்தப்பாட்டினை எடுத்துரைக்குக.
வினா 11. Paper II · திரிகடுகம் + இனியவை நாற்பது (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ3
6. (அ) "கணக்காயரில்லாத..." என்னும் "திரிகடுகம்" பாடலில், நன்மை பயவாதன என்றும்
(ஆ) "கற்றார்முன்..." என்னும் "இனியவை நாற்பது" பாடலில், இனிமை பயப்பன என்றும்
கூறப்படும் விடயங்களைத் தெளிவுறுத்துக.
வினா 12. Paper II · "அற்றைத் திங்கள்" நாடகம் — பாரிமகளிர் துயரம் (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த10·அ4
7. "அற்றைத் திங்கள்" நாடகத்தில் பாரிமகளிரின் துயரத்தை வெளிப்படுத்துவதற்கு,
(அ) புறநானூற்றுப் பாடல்
(ஆ) நாட்டார் பாடல் மரபு
ஆகியன பொருத்தமுறக் கையாளப்பட்டுள்ள வகையினை விளக்குக.

📌 பகுதி I (40 புறவய வினாக்கள்) விரைவில் சேர்க்கப்படும்.

← அனைத்து வினாத்தாள்களும்